×

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு கனிம கடத்தலை தடுக்க வாகனங்களில் ஜிபிஎஸ்

சட்டப்பேரவையில் நேற்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை மானியக்கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: சட்டவிரோத கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு குவாரி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதி மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து தடுத்து நிறுத்த இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் கலந்தாலோசித்து ரூ.1 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய திட்டம் ஒன்று வகுக்கப்படும். சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலத்திற்கு கொண்டுவரும் பொருட்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
கிராபைட் ஒரு இன்றியமையாத பொருளாக நவீன தொழில்களில் விளங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கிராபைட் சுரங்கமும், கிராபைட் தாதுவினை சுத்திகரித்து அதனை பிற தொழில்களுக்கு பயன்படும் வகையில் அதிக கரிச்சத்து உள்ள கிராபைட் செதில்களாக உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையும் உள்ளது. கிராபைட் செதில்களின் தற்போது உற்பத்தியை 6 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 25 ஆயிரம் மெட்ரிக் டன்னாக ரூ.120 கோடி செலவில் உயர்த்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Duraimurugan , Minister Duraimurugan announces GPS in vehicles to prevent mineral smuggling
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...