×

கொல்கத்தாவுக்கு எதிராக சதம் விளாசினார் பட்லர்: ராஜஸ்தான் 217 ரன் குவிப்பு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பட்லர், படிக்கல் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 97 ரன் சேர்த்தது. பட்லர் 29 பந்தில் அரை சதம் அடித்தார். படிக்கல் 24 ரன் எடுத்து (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) நரைன் சுழலில் கிளீன் போல்டானார்.

அடுத்து பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்தார். இவர்களின் ருத்ரதாண்டவத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க, ராஜஸ்தான் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. பட்லர் - சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது. சாம்சன் 38 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் மாவி வசம் பிடிபட்டார். அதிரடியை தொடர்ந்த பட்லர், நடப்பு தொடரில் தனது 2வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் 103 ரன் (61 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் வருண் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பராக் 5, கருண் நாயர் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அதிரடியில் இறங்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. ஹெட்மயர் 26 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.அஷ்வின் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் சுனில் நரைன் 2 விக்கெட், ஷிவம் மாவி, கம்மின்ஸ், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.



Tags : Butler ,Kolkata ,Rajasthan , Butler scores a century against Kolkata: Rajasthan 217 runs
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...