×

வேலூர் மாநகராட்சி பகுதியில் கானாறுகளில் மக்கா குப்பைகளை நிரப்பும் சமூக விரோதிகள்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூரில் தொடர்ந்து தூர்வாரப்படும் கழிவுநீர் கானாறுகளில் மக்கா குப்பைகளை கொட்டி நிரப்பும் பொறுப்பற்றவர்களின் செயல்களுக்கு கடும் நடவடிக்கை மூலம் மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் நகரின் மையத்தில் வடகிழக்கில் தொடங்கி தென்கிழக்காக செல்லும் மலைகளில் இருந்து வரும் ஊற்றுநீர் கானாறுகள் இன்று அகலம் குறைந்ததுடன், கழிவுநீர் கானாறுகளாக உருமாறியுள்ளன. இக்கழிவுநீர் கானாறுகளில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள், தலையணைகள், பியூஸ் போன டியூப் லைட்டுகள், பல்புகள், பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மோகோல்கள் என திடக்கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி நிரப்புவது தொடர்ந்து வருகிறது.இவ்வாறு தொடர்ந்து இக்கழிவுநீர் கானாறுகளில் குப்பைகளை கொண்டு நிரப்புவதால் கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியின்றி சாலைகளில் பெருக்கெடுக்கும் நிலை ஓல்டு டவுன் உத்திரிய மாதா கோயில் தெரு, கந்தசாமி ஜமேதார் தெரு, ஜிபிஎச் ரோடு, பாஸ்கல்நாயுடு தெரு, சைதாப்பேட்டை கானார் தெரு, நல்லெண்ண பிள்ளை தெரு, ஆற்காடு சாலை கானாறு தெரு, அருகந்தம்பூண்டி, சுண்ணாம்புக்கார தெரு, பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், காகிதப்பட்டறை என பல பகுதிகளிலும் தொடர்ந்து வருகிறது.

இக்கழிவுநீர் கானாறுகளை மழைக்காலம் மட்டுமின்றி கோடைக்காலத்திலும் மாநகராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூார்வாரி சுத்தப்படுத்தினாலும், அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் குப்பைகளால் அவற்றை நிரப்பும் போக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி, கானாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என வணிக நோக்குடன் செயல்படும் நிறுவனங்களும் தங்களது குப்பை தொட்டியாக கழிவுநீர் கானாறுகளையே கருதுவதுதான் காரணம்.பல முறை கழிவுநீர் கானாறுகளில் தூர்வாரி குப்பைகளை அகற்றும்போது, அதை ஒட்டி வாழும் மக்களிடமும், வர்த்தக நிறுவனங்களிடமும் இவற்றில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தல்களை வழங்குகிறது. ஆனாலும், அந்த அறிவுறுத்தல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டு கானாறுகளில் குப்பை கொட்டும் போக்கு தொடர்ந்து வருவதற்கு கடுமையான நடவடிக்கை மூலம் மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Mecca ,Vellore ,Corporation , In the Vellore Corporation area Social enemies filling Mecca rubbish in the canals: Public demand for action
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...