×

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது: பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநிலத்தில் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஷ்வா தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். அசாமின் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

சென்னை கல்லூரியில் படித்தவர்
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தவர் விஸ்வா தீனதயாளன். சென்னையின் அண்ணா நகரில் உள்ள கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் கிளப்பில் பயிற்சி பெற்றவர். பல தேசிய தரவரிசை பட்டங்கள் மற்றும் சர்வதேச பதக்கங்கள் பெற்ற இவர், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் நடைபெறும் இளைஞர் போட்டியில் இந்தியா சார்பாக கலந் துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vishwa Deenadayalan ,Tamil Nadu ,Modi , The death of Vishwa Deenadayalan, a young table tennis champion from Tamil Nadu, is shocking and painful: Prime Minister Modi's condolences!
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...