×

24ம் தேதி கிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் நாயர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் பகுதியாக 24.4.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதிமொழி எடுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை ஒன்றிய அமைச்சகத்தின் இணையதளத்தில் (meetingonline.gov.in) உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கிராமசபா கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24.4.2022 அன்று நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் கூட்டம் நடைபெற்றமைக்கான அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று இவ்வியக்ககத்திற்கு 30.4.2022க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Grama Niladhari ,Government of Tamil Nadu , Grama Niladhari meeting on the 24th: Government of Tamil Nadu announcement
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...