நெல்லை அருகே நிலத்தகராறில் பயங்கரம் அரசு பெண் ஊழியர் மற்றும் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம்

மானூர்:  நெல்லை அருகே பிரச்னைக்குரிய நிலத்தில் போர்வெல் போட்டதை தட்டிக்கேட்ட அரசு பெண் ஊழியர், அவரது 2 சகோதரர்கள் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். தடுக்க சென்ற 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ் (60), கட்டிடத் தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும், இதே பகுதியை சேர்ந்த இவரது சித்தப்பா மகன் அழகர்சாமி குடும்பத்திற்கும் பூர்வீக சொத்துகள் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

சொத்துகள் பிரிக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நேற்று மதியம்  பிரச்னைக்குரிய இடத்தில் அழகர்சாமி, போர்வெல் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  இதையறிந்த ஜேசுராஜ் அங்கு சென்று அழகர்சாமியை தட்டிக்  கேட்டுள்ளார். வழக்கு முடியும் வரை இந்த இடத்தில் எந்த பணிகளும்  செய்யக்கூடாது என கூறி  தடுத்துள்ளார். இதில் அவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அழகர்சாமி, தனது குடும்பத்தினருக்கு  செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். 8க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள்,  அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வந்துள்ளனர்.

சிறிது நேரத்தில்  அவர்கள் ஆவேசத்துடன் ஜேசுராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அவரது தம்பி மரியராஜ் (55), தங்கை வசந்தா (44), இவரது கணவர் ஜேசு (48), மரியராஜின் மகன் ஆமோஸ் (23) ஆகியோரையும் அக்கும்பல் வெட்டியது. இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோர் சரிந்து விழுந்தனர். தகவலறிந்து மானூர் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த 5 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ேஜசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோர் உயிரிழந்தனர்.

மரியராஜ் கிறிஸ்தவ போதகராகவும், வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ரிக்கார்ட் கிளார்க்காகவும் பணியாற்றி வந்தனர். ஜேசு, ஆமோஸ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், நெல்லை எஸ்பி (பொறுப்பு) கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் நாஞ்சான்குளத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* 4 தனிப்படை அமைப்பு

நாஞ்சான்குளத்தில் நடந்த கொலைகளில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

* 4 பேரிடம் விசாரணை

மூவர் கொலை சம்பவத்தில் அழகர்சாமி மனைவி பேச்சியம்மாள் (48), மகன் செந்தில்குமார் (26), மகள் ராஜலட்சுமி (23) உள்பட 4 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழகர்சாமியின் மகன்களான மணிகண்டன், சுந்தரபாண்டி உள்பட 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

* கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது - டிஐஜி

3 பேர் கொலை தொடர்பாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் அளித்த பேட்டியில், நாஞ்சான்குளம் கிராமத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை  சேர்ந்த 3 பேர் உறவினர்களால் அரிவாள் மற்றும் மண்வெட்டியால் வெட்டி கொலை  செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. மானூர் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை அடையாளம்  காணப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி  வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர், என்றார்.

Related Stories: