×

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த திட்டம்: வல்லுநர் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக நிதித்துறை தகவல்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அரசின் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், 1.4.2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அவர்களுக்கு ஓய்வூதியமாகவும், அவர்களுக்கு பின்னர் அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும்.

ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே, இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தன. கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதேபோல், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தில், ‘முந்தைய அரசால் மறுக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை அரசுப் பணியாளர்கள் விரும்பாத நிலையே இருந்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது 12 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத நிலுவை கோரிக்கையாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முதல்வர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு செய்து 20 ஆண்டுகளாக நிலுவையாக இருக்கும் கோரிக்கையை நிறைவேற்றி பணியாளர்களின் நலன் காக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த கடிதத்திற்கு பதிலளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்களுடைய கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.  1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* அதிமுக ஆட்சி காலத்தில், 1.4.2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
* இதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர்.
* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது.

Tags : Experts Committee , Plan to re-implement old pension scheme for Tamil Nadu government employees: Finance Ministry reports that panel of experts report is under consideration
× RELATED அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து...