×

4 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ படுதோல்வி: காங்., திரிணாமுல், ஆர்ஜேடி வெற்றி

கொல்கத்தா: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் நடந்த 4 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் வெற்றி பெற்றன. இதில், அனைத்து இடங்களிலும் பாஜ தோல்வி அடைந்தது.மேற்கு வங்க மாநிலம் பாலிகன்ஞ்ச், பீகார் மாநிலம் போச்சஹா, சட்டீஸ்கர் மாநிலம் கைராகர், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மேற்கு வங்க மாநிலம், பாலிகன்ஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாரா ஹலிமை விட 20,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங். 3ம் இடத்தையும், பாஜ 4ம் இடத்தையும் பிடித்தன. அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளரை, பாலிவுட் நடிகரும், திரிணாமுல் வேட்பாளருமான சத்ருகன் சின்கா 3 லட்சத்து 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பீகாரின் போச்சஹா தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் அமர் பாஸ்வான் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளரை தோற்கடித்தார். சட்டீஸ்கர் மாநிலம், கைராகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா, பாஜ வேட்பாளரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கோலாப்பூர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவ், பாஜ வேட்பாளர் சத்யஜித் கதமை விட 19,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 4 மாநில இடைதேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ தோல்வியை தழுவியது. சத்ருகன் சின்கா வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். மோடியுடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார். பாபுல் சுப்ரியோ கடந்த 2019ம் ஆண்டு அசன்சோல் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார்.



Tags : BJP ,Trinamool ,RJD , Held in 4 states In the by-election Bajaj defeat: Cong., Trinamool, RJD win
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்