×

வேலூரில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு 7 அலங்கார பூப்பல்லக்குகள் பவனி

*திரளான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு

வேலூர் : வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று பூப்பல்லக்கு திருவிழா களைக்கட்டும். அன்றைய தினம் இரவு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் திரளான மக்கள் இவ்விழாவை காண வேலூரில் கூடுவர்.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பூப்பல்லக்கு விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பூப்பல்லக்கு விழா இன்று நடக்கிறது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் உற்சவமூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதியை அடைகின்றனர்.

வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து செல்வ விநாயகர் உட்பட திருக்கோயில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு நூதனப்பூப்பல்லக்கில் புறப்பட்டு மண்டி வீதி வருகின்றனர். அதேபோல் வெல்ல மண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் இருந்து அபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் பூப்பல்லக்கில் புறப்பட்டு மண்டி வீதி வருகின்றனர்.

மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கை மற்றும் வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து விஷ்ணு துர்க்கை, வெங்கடேச பெருமாள் உற்சவமூர்த்திகள் அலங்கார பூப்பல்லக்கில் புறப்பட்டு மண்டி வீதி வருகின்றனர். வாணியர் வீதி கனக துர்க்கையம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கனகதுர்க்கையம்மன், விநாயகர் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதியை அடைகின்றனர்.

லாங்கு பஜார் புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன் கோயிலில் இருந்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு மண்டி வீதியை அடைகிறது. அதேபோல் புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதியை அடைகின்றனர்.

இவ்வாறு இன்று இரவு மண்டி வீதி வந்தடையும் பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவமூர்த்திகளுக்கு அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு வாண வேடிக்கைகள், மேளதாளங்களுடன் 7 பூப்பல்லக்குகள் புறப்பட்டு மண்டி வீதி, லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர்பெட்ரோடு, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், அண்ணா சாலை வழியாக கோட்டைவெளியை அடைகின்றன.

 அங்கு வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதையொட்டி இன்னிசை கச்சேரிகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chitra Paurnami , Vellore, Chithrapournami,Flower show
× RELATED சோழர்கால பெருவழிப்பாதை வணிகம் பழமை...