×

தஞ்சை அருகே சாக்கு மூட்டையில் வைத்திருந்த நடராஜர் உலோக சிலை பறிமுதல்

*3 பேர் கைது


தஞ்சை : தஞ்சை அருகே விற்பனை செய்வதற்காக நடராஜர் உலோகச் சிலையுடன் இருந்த 3 வாலிபர்களை சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் பைபாஸ் கும்பகோணம் வழித்தடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் எஸ்ஐ சின்னதுரை, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிலை திருட்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி கரைமேடைச் சேர்ந்த கேசவன் மகன் பிரபாகரன் (27), அல்லாபாக்ஸ் மகன் பைசல் அகமது (27), அய்யம்பேட்டை சக்கராபள்ளி எஸ். தோட்டத்தைச் சேர்ந்த சுலைமான் பாட்சா மகன் சாகுல்ஹமீது (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் பூதத்தின் மேல் வலது காலை வைத்தும், இடது காலை வலப்பக்கம் தூக்கிய நிலையில் நடராஜர் உலோக சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை 21 சுடருடன் கூடிய திருவாச்சியில் 13வது சுடர் அறுத்து எடுக்கப்பட்ட நிலையிலும், முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

இந்த நடராஜர் உலோகச் சிலையை விற்பதற்காக மூவரும் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்துஇச்சிலையை போலீசார் பறிமுதல் செய்து பிரபாகரன், பைசல் அகமது, சாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது யாருக்காக விற்பனை செய்ய கொண்டு வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Nadarajar ,Taji , Thanjavur, natarajar statue , Seized
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி