×

இலங்கை தமிழர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்து தர வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு  தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை  அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தர வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 31ம் தேதி இந்தியப் பிரதமரை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ​​இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்தேன்.
மேலும் கடந்த 7ம் தேதி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவு தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு உறுதியோடு உள்ளது.

இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தர வேண்டும். அடுத்து, கடந்த மாதம் 23ம் தேதி தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் துயர நிலை குறித்து கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது. மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத் தொகையைச் செலுத்த இயலாத காரணத்தினால், 12-5-2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விஷயத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளைச் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamilans ,Thoothukudi port ,Union ,Foreign Minister ,Thoothukudi ,State Affairs ,Minister for Foreign Affairs ,KKA Stalin , Sri Lankan Tamils, Thoothukudi Port, Union Foreign Minister, Chief Minister MK Stalin
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...