×

ஊட்டியில் கொட்டும் கோடை மழையால் கடல்போல் காட்சி அளிக்கும் டைகர்ஹில் அணை

*குடிநீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

ஊட்டி :  ஊட்டியில் பெய்து வரும் மழையால்  டைகர்ஹில் அணையில் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. நீலகிாி  மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர லட்சக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின்  குடிநீர் தேவை நகராட்சி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

ஊட்டி நகரின்  முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதற்கு  அடுத்தப்படியாக டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை உள்ளிட்ட நீர் தேக்கங்கள்  உள்ளன. இதில் தலையாட்டிமந்து பகுதிக்கு மேற்புறம் வனப்பகுதிக்குள்  டைகர்ஹில் அணை அமைந்துள்ளது.

இந்த அணையில் இருந்து தலையாட்டிமந்து,  மிஷினரிஹில், ஒல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு டைகர்ஹில் அணையில் இருந்து  நீர் விநியோகம் செய்யப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள்  அமைந்துள்ளதால் புலி, சிறுத்தை, காட்டுமாடு,  மான்கள் போன்றவையும் இங்கு  நீர் அருந்துகின்றன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை பெய்த  மழையால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக அளவு உயர்ந்தது.

அதன்பின் மழை குறைந்த  நிலையில் உறைபனி மற்றும் கோடை காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்ததால்  நீர்மட்டம் குறைய துவங்கியது. இந்நிலையில் கடந்த மாதம் 2வது வாரத்தில்  இருந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் டைகர்ஹில் அணையில் நீர்மட்டம்  வெகுவாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 39 அடியில் 37 அடி வரை  நீர் இருப்பு உள்ளது.

மழை தொடர்ந்து வரும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயர  கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் கோடை சீசனின்போது  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.




Tags : Tigerhill Dam ,Ooty , ooty, Drinking Water,Tiger hill dam,Summer rain
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...