×

சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவம் மதுரை மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: 2 ஆண்டுக்குப்பின் பல்லாயிரம் பக்தர்களுடன் கோலாகலம்

மதுரை: சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. 2 ஆண்டிற்கு பின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12ம் தேதி பட்டாபிஷேகம், மறுநாள் திக்கு விஜயம் நடைபெற்றது. நேற்று காலை சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவமான  மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டாக எளிமையாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. தொற்று குறைந்ததையடுத்து இம்முறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஆன்லைனில் ரூ.200, ரூ.500 டிக்கெட் எடுத்தவர்கள், இலவச பாஸ் வைத்திருந்தவர்கள், பேட்ச் வைத்திருந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மணப்பெண்ணான மீனாட்சி அம்மன், தங்கக் கவசத்துடன், சிவப்பு கேரா நிறத்தில் சேலை உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார். சுந்தரேஸ்வரர் வெண்பட்டு, பிரியாவிடை பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை நிகழ்ச்சி, கோயிலுக்குள் கன்னி ஊஞ்சல் ஆடுதல் நடந்தது. பின்னர் மணமக்கள் மண மேடைக்கு வந்தனர். மணமகளின் இடதுபக்கம் பவளக்கனிவாய்ப் பெருமாளும், வலதுபுறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருந்தனர். ரூ.25 லட்சம்  செலவில் சுமார் 4 ஆயிரம் கிலோ அளவுக்கு பல வண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.15 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமகள் மீனாட்சியாக ஹலாஸ் பட்டரும், சுந்தரேஸ்வரராக சிவனேஸ் பட்டரும் வீற்றிருந்தனர்.

மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், பின்னர் சுமங்கலி பூஜையும் நடந்தது. தொடர்ந்து பட்டர்கள் மாலை மாற்றிக்கொண்டனர். பின் சுந்தரேஸ்வரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலியை சிவனேஸ் பட்டர், ஹலாஸ் பட்டர் ஆகியோர் மூன்று முறை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்டினர்.

காலை 10.51 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளம், நாதஸ்வரம் ஒலிக்க மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது வண்ண மலர்கள் மணமக்கள் மீது கொட்டப்பட்டன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தாலியை ஒற்றிக் கொண்டும், புதிய மங்கல நாணும் அணிந்து கொண்டனர். மணமக்களுக்கு தங்கக் கும்பாவில் சந்தனமும், தங்கச்செம்பில் பன்னீரும் தெளிக்கப்பட்டு, தங்கத்தட்டில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் மேடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  மாலையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* இன்று தேரோட்டம்
சித்திரைத்திருவிழாவில் இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர்.

* நாளை வைகையில் இறங்குகிறார் அழகர்
அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார். வழி நெடுக உள்ள சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், நாளை காலை 5.50 மணியளவில் வைகையாற்றில் இறங்குகிறார். விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

Tags : Madurai ,Meenakshiamman ,Sundareswarar ,Thirukkalyanam , Madurai Meenakshiamman-Sundareswarar Wedding Ceremony: Stirring with tens of thousands of devotees after 2 years
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...