×

சமத்துவபுரங்களை சீரமைக்க முதல்வர் ரூ.190 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி:  சமத்துவபுரங்களை சீரமைக்க முதல்வர் ரூ.190 கோடி ஒதுக்கியுள்ளார் என, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று  திமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா, பெரியார், கலைஞர் வழியில் சாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அனைத்து மதத்தை சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக வசிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கலைஞர் 238 சமத்துவபுரங்களை உருவாக்கினார்.  

இடைப்பட்ட காலத்தில் ஆட்சி மாற்றம் வந்தபோது சமத்துவபுரங்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள். அதையும் தாண்டி கட்டி முடிக்கப்பட்ட 5 சமத்துவபுரங்களை உரியவர்களிடம் 10 ஆண்டுகளாக வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். அந்த சமத்துவபுரத்தை ரூ.2 கோடியில் புதுப்பித்து பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கியுள்ளார். மேலும் 4 சமத்துவபுரங்கள் விரைவில்பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும் 238 சமத்துவபுரங்களையும் மேம்படுத்த ரூ.190 கோடியை முதல்வர் ஒதுக்கி புத்துயிர் ஊட்டியுள்ளார். வீடுகளை பராமரிக்க ஒரு வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  சாதி மதம் பேதமின்றி வாழ்ந்து காட்டுவோம் என்ற அடிப்படையில் அதற்கான சட்டம், திட்டங்களை தீட்டி மக்களுக்கு முதல்வர் அர்ப்பணித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Minister ,KR Periyakaruppan , Chief Minister allocates Rs 190 crore to renovate equality houses: Minister KR Periyakaruppan's speech
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...