×

லஞ்சப் புகார் எதிரொலியால் கர்நாடகாவில் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா.! நாளை ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாக தகவல்

பெங்களூரு: லஞ்சப் புகார் எதிரொலியால் கர்நாடகாவில் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 40 சதவீதம் கமிஷன் கேட்டதால் விஷம் குடித்து காண்டிராக்டர் உயிரிழந்த நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மந்திரி ஈசுவரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே.பாட்டீல்.

காண்டிராக்டரான இவர் மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈசுவரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது சாவுக்கு மந்திரி ஈசுவரப்பாதான் காரணம் என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, மந்திரி ஈசுவரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

இதைத்தொடர்ந்து ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மந்திரி ஈஸ்வரப்பா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன. எனினும், நான் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று ஈஸ்வரப்பா கூறிவந்தார். இந்த நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மையை நாளை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாகவும் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஈஸ்வரப்பா தெரிவித்திருக்கிறார்.


Tags : Rajak Minister ,Iswarappa ,Karnataka , BJP minister Eeswarappa resigns in Karnataka over bribery allegations Information that he will submit his resignation letter tomorrow
× RELATED நான் ஜெயிப்பது உறுதி: பாஜவில் இருந்து...