×

10 நாட்கள் பெய்த கோடை மழை காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் பெருஞ்சாணி நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. அணைகள் மூடப்பட்டுள்ளதால் கோடை மழையால் பெய்த தண்ணீர் சேகரிக்கப்பட்டு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை  அதிகபட்சமாக நாகர்கோவில் பகுதியில் 40 மி.மீ மழை பெய்திருந்தது. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 1ம் தேதி 36.25 அடியாக காணப்பட்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 38.02 அடியாக உயர்ந்துள்ளது. இதனை போன்று 17.60 அடியாக காணப்பட்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 23.80 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிற்றார்1 அணை நீர்மட்டம் 7.77 அடியில் இருந்து 8.46 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றார்2 அணை நீர்மட்டம் 7.87 அடியில் இருந்து 8.46 அடியாக உயர்ந்துள்ளது.

பொய்கை அணை நீர்மட்டம் 20.30 அடியில் இருந்து 19.50 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 15.40 அடியில் இருந்து 12.10 அடியாகவும் சரிந்துள்ளது. வறண்டு காணப்பட்ட மாம்பழத்துறையாறு அணையில் நீர்வரத்து தொடங்கி 0.66 அடி தண்ணீர் உள்ளது. வரும் நாட்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் ேகாடை மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் குறைந்திருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.



Tags : Perunchani Dam , Nagercoil: The water level of Perunchani in Kumari district has risen by 6 feet due to continuous summer rains for the last 10 days.
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!!