×

‘சார் இது உங்க கார் இல்லை’ உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார் எடப்பாடி: தலைமை செயலக வளாகத்தில் ருசிகரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக தனது கார் என நினைத்து உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற ருசிகர சம்பவம் நேற்று நடந்தது. சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டம் பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரை கூட நடைபெறுகிறது. நேற்றும், தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சரியாக பிற்பகல் 3.52 மணிக்கு முடிந்தது.

கூட்டம் முடிந்ததும், அமைச்சர்கள், உறுப்பினர்களை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக நின்றன. வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கார், 4வது கேட் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்று கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி 4வது கேட் வழியாக வெளியே வந்தார். அப்போது, அங்கு கூடி இருந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபடி நடந்து வந்தனர். ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எடப்பாடி அமைதியாக சென்று கொண்டு இருந்தார். பின்னர் அங்கு நின்ற சாம்பல் நிறத்திலான இன்னோவா காரில் ஏறுவதற்காக, கார் கதவை திறக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர், ‘‘சார் இது உங்கள் கார் இல்லை” என்றார். உடனே சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘‘ஓ... இது என் வண்டி இல்லையா? சாரி...” என்று கூறிவிட்டு, தனது உதவியாளரிடம் ‘‘எனது கார் எங்கு இருக்கிறது என்று உனக்கு தெரியாதா? நான் நம்ம வண்டின்னு நினைச்சேன்” என்று கூறிவிட்டு,  அந்த காருக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த, சாம்பல் நிறத்திலான இன்னோவா காரில் எடப்பாடி ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி விசாரித்தபோதுதான், எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கார் என தெரியவந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த ருசிகர சம்பவத்தை நேரில் பார்த்த சென் னை, தலைமை செயலகத்தில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், காவலர்கள் நகைச்சுவையாக ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Udayaniti Stalin ,Fussiram , Udayanithi Stalin, Edappadi, General Secretariat,
× RELATED இந்தியாவிற்கு நல்ல பிரதமரை...