சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரம்: பாஜக மாநில பொதுச்செயலாளர், மாமன்ற உறுப்பினர் உள்பட 75க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

சென்னை: சென்னை அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், மண்டபமானது இந்து அறநிலையத்திற்கு சொந்தமானது எனவும், வேறு எந்த தனிப்பட்ட நபர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ தலையிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபம் வந்தனர்.

அப்போது அங்குள்ள பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் மற்றும் 75-க்கும் மேற்பட்டோர் ஓன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மண்டபத்தின் கதவுகளை பூட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனை அறிந்த பாஜக மாநில செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி செயல்படுதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் பாஜக மாநில செயலாளர் கரு நாகராஜன் மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் உள்ளிட்ட 75-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: