×

சத்தியமங்கலம் வனச்சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி கோரி லாரிகள் ஸ்டிரைக்: ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனச்சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. தமிழக, கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள வனச்சாலையில் 16.2 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.  இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சத்தியமங்கலம் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்பிஎஸ் பொன்னுசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சியினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தடை காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பரிசீலனை செய்து கனரக லாரிகளை அனுமதிக்க தமிழக, கர்நாடக முதவர்கள் ஆவன செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் 350 அடி நீள துணி பேனரில் திம்பம் சாலையில் வாகன போக்குவரத்து தடையை நீக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகம் எழுதப்பட்டிருந்தது. லாரி உரிமையாளர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சத்தி பேருந்து நிலையம், கோவை சாலை, கோபிசெட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நேற்று சத்தியமங்கலம் பகுதியில் பெரும்பான்மையான லாரிகள் இயக்கப்படவில்லை.

Tags : Satyamangalam , Trucks strike in Satyamangalam forest demanding permission for heavy vehicular traffic: More than a thousand shops closed
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது