×

அசைவ உணவு - ராமநவமி பூஜை விவகாரம் டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மோதல்: கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம்

புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யூ மாணவர்களிடையே நேற்று நடந்த மோதலில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், பல்கலை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று ராம நவமியை முன்னிட்டு அசைவ உணவு நிறுத்தப்பட்டதற்கு ஒரு தரப்பும், பல்கலைக்கழக வளாகத்தில் ராமநவமி விழா கொண்டாட இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மற்றொரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டனர். குறிப்பாக இடதுசாரி மற்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கல் வீச்சு சம்பவமும் நடந்தது, இதில் 15 மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சாய் பாலாஜி வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் மாணவர் அமைப்பினர் ராம நவமி கொண்டாட இருப்பதால், விடுதியில் அசைவ உணவு தயாரிப்பதை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாலையில் விடுதிக்குள் சென்ற பாஜக மாணவ அமைப்பினர் அங்கு அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.

இந்த செயல்களை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டிக்க வேண்டும். மூடப்பட்ட மாணவர்களின் விடுதியை திறக்க வேண்டும். மெஸ் செயலாளரையும் தாக்கினர். காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போராடும் சூழல் வந்துள்ளது’ என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏபிவிபி வெளியிட்ட அறிக்கையில், ‘இடதுசாரி அமைப்பின் மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டனர். தற்போது அவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதை நாங்கள் தடுப்பதாக கூறி பிரச்னையை திசை திருப்புகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.

இருந்தும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறிவருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, ஜேஎன்யூ வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். சாட்சிகளின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ramnavami ,Delhi ,JNU , Non-vegetarian food, students, conflict
× RELATED ராமநவமி யாத்திரைக்குழுவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது