×

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சிசிடிவி கேமரா இல்லாததால் அடிக்கடி நடக்கும் குற்ற சம்பவங்கள்: போலீசார் திணறல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த, சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இச்சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.

கடந்த 2019, அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சந்தித்து, புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். அப்போது, பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டனர். இரு நாட்டு தலைவர்கள் வருகையொட்டி முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக, கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், வயர்களுடன் திருடப்பட்டன. இதையறிந்ததும், தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட கேமராக்களை, அந்நிறுவனத்தினர் கழற்றி கொண்டு சென்றனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள், வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் செல்கின்றன. ஆனால், சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து, தனியார் நிறுவனத்திடம் மீண்டும் பேசி, ஏற்கனவே அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை, மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிப்பறி, விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mamallapuram ECR , Frequent crime due to lack of CCTV camera on Mamallapuram ECR road: Police stalemate
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...