×

தொடர்ந்து 11வது முறையாக குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகளை எடக்கிறது. இதன்படி, நடப்பு நிதியாண்டுக்கான முதல் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் கடந்த 6ம் தேதி, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் துவங்கியது.

இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:
*வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. இது 4 சதவீதமாகவே நீடிக்கிறது.
* இதுபோல், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்கும் டெபாசிட்களுக்கான வட்டி 4.25 சதவீதமாக உள்ளது. இதிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
* நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்ளநாட்டு உற்பத்தி வளர்ச்சி, இதற்கு முன்பு கணித்திருந்த 7.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
* இதுபோல், நடப்பு நிதியாண்டுக்கான பண வீக்கம் 5.7 சதவீதமாக உயர்ந்திருக்கும். இது முன்பு 4.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
* உலகளாவிய பதற்ற நிலை காரணமாக, பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
* ரபி பருவ அறுவடை அமோகமாக இருக்கும் என்பதால், ஊரக பகுதிகளில் தேவை அதிகரிக்கும். இதனால், சுற்றுலா, விருந்தோம்பல், விமான போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
* ரிசர்வ் வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதிச்சந்தைகள் துவங்கும் நேரம், கொரோனா பரவலுக்கு முன்பிருந்தபடி, காலை 9 மணிக்கு துவங்கும். வரும் 18ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

மேற்கண்ட முக்கிய முடிவுகள், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
இதுபோல், வங்கி சாராத நிறுவனங்கள் பாரத் பில் பேமன்ட் சேவையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், அந்த நிறுவனங்களின் நிகர மதிப்பு ரூ.100 கோடி இருக்க வேண்டும் என்பதில் இருந்து ரூ.25 கோடியாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சொத்து மதிப்பின்படி வீட்டுக்கடன் வழங்கும் நடைமுறை நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் இருந்தபோது, சொத்து மதிப்பு அடிப்படையில் மட்டும் கணக்கீடு செய்து கடன் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. கடந்த நிதியாண்டில், அதாவது, மார்ச் 31ம் தேதி வரையிலான கடன்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கண்ட நடைமுறையை நடப்பு நிதியாண்டு முழுவதும், அதாவது, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும், இதனால் வீட்டுக்கடன் அதிகம் பேருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

‘ஏடிஎம்களில் விரைவில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி’
அனைத்து ஏடிஎம்களிலும், டெபிட் கார்டு இல்லாமலேயே வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தள்ளார். ‘‘தற்போது சில வங்கிகள் மட்டும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளன. இதேபோல், அனைத்து ஏடிஎம்களிலும் யுபிஐ முறையில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். கார்டு விவரங்களை திருடி வங்கி கணக்கில் இருந்து பணம் அபகரிப்பது தடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகள் என்சிபிஐ, வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவை வழங்குவோருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்,’ என்று அவர் கூறினார்.

Tags : RBI , Interest rate, Reserve Bank
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!