×

பெண் பத்திரிகையாளர்கள் விவகாரம் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்; 4 வழக்குகளில் தனித்தனியாக பிரமாண பத்திரம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பாஜவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக வலைதளத்தில் பதிவு செய்தது நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டது.  நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க எஸ்.வி.சேகர் தயாராக உள்ளார்.  அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே அவர் பகிர்ந்துள்ளார். அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை.  விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்து எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, அவர் மீது தொடரப்பட்ட  நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : S. VV Sekar , SV Sehgar apologizes unconditionally over affair of female journalists; Separate affidavit in 4 cases: ICC order
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...