வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும்: தமிழக முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் வருமாறு: தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். ஆனால், அவர்கள் தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த உண்மை தங்களுக்குத் தெரியும். அதனால் தான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறீர்கள். வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டீர்கள். அடுத்தக்கட்டமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டை புதிய சட்டம் மூலம் மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு.

வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மக்கள்தொகை குறித்த எந்த வினாவையும் உச்ச நீதிமன்றம் எழுப்பவில்லை. உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அரசு வழங்க முடியும்.

தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி பாமக சார்பில் உரிய சமூகநீதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: