பொன்னேரி அரசு கல்லூரியில் பரபரப்பு கல்லூரி மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த உதவி பேராசிரியர் கைது

சென்னை: பொன்னேரி அரசு கல்லூரியில் மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த உதவி பேராசிரியரின் ஆடியோ வைரலானது. இதை தொடர்ந்து அவர்  கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் 4,745 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் உதவி பேராசிரியர் ஒருவர் மாணவியை தனது வீட்டிற்கு வா என செல்போனில் அழைக்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியின், ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியராக உள்ளவர்  மகேந்திரன்(59). அவர் இறுதி ஆண்டு படிக்கும் அந்த கல்லூரி மாணவியின் தொலைபேசிக்கு கடந்த மாதம் தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர், அந்த மாணவியை வீட்டிற்கு வரச் சொல்லியும், இறுதியாண்டு படித்து வருவதால் வீட்டுக்கு வந்தால் உபயோகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, மாணவி, ‘நான் ஏன் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு, ‘நட்பை வளர்த்துக் கொள்ளலாம்’ என உதவி பேராசிரியர் பதில் அளித்துள்ளார். சிறிது நேரம் ஒன்றும் புரியாத மாணவி, பின்னர், சுதாரித்துக்கொண்டு அப்படி எல்லாம் நட்பை வளர்க்க தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும், தனக்கு ஒரு சில பாடக்குறிப்புகள் வேண்டும் எனவும் அதை கூகுளில் பிரின்ட் அவுட் எடுத்து கொடுக்க வேண்டும் எனவும் அதற்கான காசை கொடுத்து விடுவதாகவும் மாணவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி என் பெற்றோர் அதுபோன்று எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டார்கள். நானே இதுவரை எங்கு சென்றும் பிரின்ட் அவுட் எடுத்தது இல்லை. எதற்காக என்னிடம் அப்படி கேட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு உதவி பேராசிரியர், ‘நீயும் நமது சாதியை சேர்ந்த பெண்தான். அதனால் நட்பை வளர்க்கலாம்’ என கூறியிருக்கிறார். உதவிப் பேராசிரியர் மாணவியை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைக்கும் இந்த ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  பொன்னேரி காவல்துறையினர் இதுகுறித்து கல்லூரியில் விசாரணையை நடத்தினர். உதவிப் பேராசிரியர் ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என்றும் எனக்கு வேண்டாதவர்கள் செய்த வேலை இது என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, கல்லூரி சார்பாக 3 பெண் பேராசிரியர்களை கொண்ட மகளிர் குறைதீர்க்கும் குழு அமைத்து விசாரணை நடத்தினர். இதன் அறிக்கையை கல்லூரி இயக்குநருக்கு கொடுத்தனர். அதில் உதவி பேராசிரியர் மகேந்திரன் அந்த மாணவியிடம் பேசியது உண்மை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் சேகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகிதா அன்னா கிறிஸ்டி போலீசாருடன் கல்லூரிக்கு வந்து விசாரணைக்காக உதவி பேராசிரியரை காவல் நிலையம் அழைத்து சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் உதவி பேராசிரியருக்கு, எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இதன்பின் அவர் மீது 5 வழக்குகள் பதிந்து கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீசார் அவரை  புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: