கோவை: கோவையில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார்.
பின்னர், பொதுமக்களுக்கு, தர்பூசணி, இளநீர், முலாம்பழம், நீர்-மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதன்பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் ஆணைக்கு இணங்க, பொதுமக்களின் தாகம் தீர்க்க, பல்வேறு பகுதிகளில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்-மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. கோவையின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக முதல்வர் தாராளமாக நிதி ஒதுக்கி வருகிறார்.
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். ஒவ்வொரு துறையிலும் ஆய்வுசெய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின்உற்பத்தி திட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டன. இத்திட்டங்களை ஆய்வுசெய்து, பணிகளை நிறைவேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் தமிழக மின்தேவை 17,300 மெகாவாட் மின்சாரம். இது, பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தையும் வாங்கி வருகிறோம்.
அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கோவையில் சில இடங்களில் நீதிமன்ற வழக்கு காரணமாக, மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்பட்டு, மேம்பால பணிகள் தொடரும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு பின்னர் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
கோவை மாநகரில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கவுன்சிலர்கள் சாந்தி, தீபா இளங்கோ, முபஷீரா, சிங்கை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
