×

ஆலங்காயம் அருகே பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் அதிகாரிகள் சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம்-விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆலங்காயம் : ஆலங்காயம் அருகே பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் அதிகாரிகள் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல சாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில், பயணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக சாலையை அகலப்படுத்தி தர வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுக்காமலயே, புதிய சாலை போடப்பட்டதால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதாக கூறி மலைக்கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் 7 மணி நேர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நேரில் வந்த மாவட்ட அளவிலான அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மலைகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆனால், இதுவரை சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளத்திற்கு தற்காலிகமாக மண் நிரப்ப 7 நாள் அவகாசம் வழங்கி, அதற்கான ஆணையை உரிய அதிகாரிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பிவிட்ேடாம்’ என்றனர்.  

ஆனால், இதுவரை இந்த சாலையை சீரமைக்காததால் அவ்வழியே மலை கிராம மக்கள் அச்சத்துடன்  பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஒருவார காலத்தில் மட்டும் ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் ஜவ்வாது மலை கிராமத்தில் ஏற்பட்ட இரு விபத்துகளில் 15 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இதுபோன்ற பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பே, நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனப் போக்கை கைவிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Alangayam , Alangayam: After the public protest near Alangayam, the authorities did not repair the road leading through the forest
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...