×

எமரால்டு பகுதியில் ரூ.18.54 கோடியில் மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு

ஊட்டி : ஊட்டி  அருகேயுள்ள எமரால்டு பகுதியில் ரூ.18.54 கோடியில் மருத்துவமனை  கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எப்போது திறக்கப்படும் என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு  கிராமம் அமைந்துள்ளது. இங்கு நீர் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள எமரால்டு  அணை உள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் எமரால்டு வேலி, காட்டுக்குப்பை,  அண்ணாநகர், இந்திராநகர், பழைய அட்டுபாயில், கோத்தகண்டி, நேருநகர், லாரன்ஸ்,  குட்டிமணி நகர் 35க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் காய்கறி தோட்டங்களுக்கும், கூலி வேலைகளுக்கும்  சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராம மக்கள் தங்களின் அவசர  மருத்துவ தேவைகளுக்கு சிகிச்சை பெற சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஊட்டி  அரசு தலைமை மருத்துவமனை அல்லது மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கோ சென்று வர  வேண்டிய சூழல் உள்ளது. அருகாமையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை  இல்லாததால் முதியோர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினும்  பாதிப்படைந்து வந்தனர்.

எமரால்டு சுற்று வட்டார கிராம மக்களின் நலனை  கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் படுக்கை உள்ளிட்ட அனைத்து நவீன  மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, மருத்துவமனை கட்ட எமரால்டு காவல் நிலையத்திற்கு பின்புறம்  சுமார் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.18.54 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மருத்துவமனைக்கான கட்டிட  கட்டுமான பணிகள் துவங்கியது. கொரோனா காரணமாக, சில மாதங்கள் கட்டுமான பணிகள்  மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது கட்டுமான பணிகள்  அனைத்தும் முடிக்கப்பட்டு மருத்துவமனை திறப்பதற்கு தயாராக உள்ளது.  மருத்துவனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறந்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எமரால்டு சுற்று வட்டார பகுதிகளை  சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Emerald , Ooty: When will the Rs 18.54 crore hospital in the Emerald area near Ooty be completed and opened?
× RELATED மூலிகை வேளாண் தொழில் நுட்பங்களை...