×

சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி... கனரக வாகனங்களுக்கான தடை நீடிக்கிறது!!

சென்னை : சத்தியமங்கலம் பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்திற்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு கடந்த வாரம்  தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், சத்தியமங்கலம் பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும் 16.2 டன் எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் உரிய அனுமதியுடன் சென்று வரலாம்.

அனைத்து நேரங்களிலும் பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 27 கிமீ தூரமுள்ள சாலையில் ஒவ்வொரு 5 கிமீ தூரத்திலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். சிசிடிவி பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Satyamangalam , Satyamangalam, forest, light vehicles
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது