×

இங்கும் கூட பொருளாதார நெருக்கடி: குவைத் அரசு பதவி விலகல்

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி குவைத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றதையொட்டி பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றதும் ஷேக் சபாவை மீண்டும் பிரதமராக அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா நியமித்தார். இந்நிலையில், அமைச்சரவை அமைப்பதில் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை என்றும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசின் தலையீடு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்ப கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 30க்கும் மேற்பட்ட எம்.பி‌.க்கள் அதற்கு ஆதரவளித்தனர்.

இதனால், நாடாளுமன்றத்தில் குழப்பம் உருவானது. அதே நேரத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ளதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடன் பிரச்னை காரணமாக அரசு சொத்துக்கள் விற்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா கடிதத்தை அரசர் ஷேக் நவாப்பிடம் ஒப்படைத்தனர். இந்த வாரத்தில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர இருந்த நிலையில், அரசு ராஜினாமா செய்தது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குவைத்தில் 3வது முறையாக அரசு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை, பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு அரசுகள் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், குவைத்திலும் இதேபோன்ற நிலையில் அரசு ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kuwaiti government , Economic crisis here too: Kuwaiti government resigns
× RELATED கொரோனா வைரசால் கடுமையாக...