×

பாபநாசம் கோயில் சித்திரை விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்: திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயிலிலும் சித்திரை விசு திருவிழா தொடங்கியது

வி.கே.புரம்: பாபநாசம் கோயிலில் சித்திரை விசுத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பாபநாசம் உலகம்மை சமேத பாபநாசம் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை விசுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சித்திரை விசுத் திருவிழா கோயில் வளாகத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. தேரோட்டம், தெப்ப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை உலகம்மை சமேத பாபநாசம் சுவாமி கோயிலில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தினரின் சார்பில் மண்டகப்படி திருவிழாவும், சுவாமி, அம்பாள் அலங்கார வீதி உலா வருதலும் நடைபெறும். முக்கிய திருவிழாவான 9ம் திருவிழா, 13ம் தேதி வி.கே. புரத்தில் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் 10ம் திருவிழா அன்று பாபநாசத்தில் இரவு தெப்பத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து அதிகாலையில் சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சி கொடுத்த விழாவும் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் வி.கே. புரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ்பெருமாள், துணைத் தலைவர் திலகா சிற்றரசன், மதுரா கோட்ஸ் தொழிலியல் உறவு மேலாளர் சூரியபிரபா, 8ம் திருவிழா மண்டகப்படி தலைவர் அருண், ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் ராமலிங்கம், அதிமுக மீனாட்சி சுந்தரம், திமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், சிற்றரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் செய்திருந்தார்.
இதுபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயிலிலும் சித்திரை விசு திருவிழா தொடங்கியது.

திருக்குற்றால நாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5.44 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. நிகழ்ச்சியில் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், கவுன்சிலர் கிருஷ்ணராஜா, திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கார்த்திக்கேயன், சுரேஷ், ஜோதி முருகன், அருண், மதிமுக செயலாளர் வேல்ராஜ்,

சர்வோதயா கண்ணன், திருக்கோவில் பணியாளர்கள் நடராஜன், பரமசிவன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் 8ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 9ம் தேதி நான்கு தேர்கள் ஓடும் தேரோட்டம் நடக்கிறது. 11ம் தேதி நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14ம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் சங்கர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

Tags : Babanasam Temple Pitra Visual Festival ,Tirukuthala ,Nathaswamy ,Thirukoil , Papanasam Temple Chithirai Visu Festival begins today with flag hoisting: Chithirai Visu Festival begins at Thirukurtala Nathaswamy Temple too
× RELATED ஆன்மிகம் பிட்ஸ்: சிலந்திக்கும் அருளிய சிவன்