×

எப்சி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆட்டோக்களை மேம்பாலத்தில் நிறுத்தி ஆர்டிஓ ஆபீசை டிரைவர்கள் முற்றுகை-பொதுமக்கள் வாக்குவாதம் பரபரப்பு

புதுச்சேரி :  எப்சி கட்டணத்தை   ரூ.700ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்திய மத்திய,   மாநில அரசுகளை கண்டித்தும், உயர்த்திய எப்சி கட்டணத்தை திரும்பபெற   வலியுறுத்தியும் ஏஐடியுசி புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் சார்பில்   போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தை ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டு நேற்று   மறியல் போராட்டம் நடைபெற்றது.
 ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர்   சேதுசெல்வம், ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர், பொருளாளர் செந்தில்முருகன்   ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிர்வாகிகள் பாளையத்தான், ரவிச்சந்திரன்,   சுப்பிரமணியன், வாசு, ஜீவா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்   200க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், ஆட்டோக்களுடன் கலந்துகொண்டு   கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். அப்போது 100 அடி   மேம்பாலத்தில் டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி மறியல்   போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து வந்த தெற்கு எஸ்பி ரவிக்குமார், முதலியார்பேட்டை   போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ   டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதை ஏற்க மறுத்து   போராட்டத்தை தொடர்ந்த நிலையில், அவ்வழியாக மேம்பாலத்தில் ஏறிச்செல்ல   வாகனங்களில் வந்த பொதுமக்கள் ஆட்டோக்களை அகற்றுமாறு கூறியதால்   டிரைவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர்   போக்குவரத்து துறை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை   நடத்தினர். அப்போது அரசிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக   உறுதியளித்ததால் மறியலை கைவிட்டு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள்  கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரமாக அங்கு பரபரப்பு நிலவியது.

நெரிசலில் சிக்கி தவித்த சபாநாயகரின் வாகனம்

புதுச்சேரி   100 அடி ரோடு மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி ஏஐடியுசி டிரைவர்கள்   முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சபாநாயகர்  செல்வத்தின் கார் வந்தது. அங்கு ஏற்கனவே வாகனங்கள் அணிவகுத்து நெரிசலில்   சிக்கித் தவித்த நிலையில் சபாநாயகரின் வாகனமும் டிராபிக் ஜாமில் சிக்கிக்கொண்டது. இதனால் மற்ற வாகனங்களுடன் வரிசையோடு வரிசையாக ஊர்ந்து ஊர்ந்து   அவரது வாகனம் பயணித்தது.

இதனால் சபாநாயகர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு   சிறிதுநேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனிடையே புதுச்சேரியில்   ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகளை   பாதிக்கின்ற வகையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை   எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : AFC , Puducherry: Condemning the Central and State Governments for raising the FC tariff from Rs.700 to Rs.4,600, the FC tariff hike has been increased.
× RELATED சில்லி பாயிண்ட்