×

நட்சத்திர ஓட்டல்களில் கிராக்கி ஊட்டியில் சைனீஸ் ரக காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி :  ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் குறுகிய கால பயிர்களான சைனீஸ் ரக காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி  மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது.  இதனையடுத்து, சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி  சுற்று வட்டார பகுதிகளாக தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை,  கொல்லிமலை ஒரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட்  கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பர்க், செல்லரி, லீக்ஸ், பார்சிலி,  லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன.

இவ்வகை  காய்கறிகள் நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் நூடுல்ஸ், சூப், பர்கர்  மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரியில்  விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள், விவசாயிகளிடம்  இருந்து வாங்கி, அதனை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அனுப்புகின்றனர். இதுமட்டுமின்றி டெல்லி உள்ளிட்ட  வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், மே மாதத்தில் ஊட்டி  மட்டுமின்றி வடமாநிலங்களிலும் சைனீஸ் ரக காய்கறிகளுக்கு தேவை இருக்கும்  என்பதால் நல்ல விலை கிடைக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு விவசாயிகள்  சைனீஸ் ரக காய்கறிகள் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறுகிய கால  பயிர்களான இவை 45 முதல் 50 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.

தற்போது, நீலகிரி  மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து  வருகிறது. இதனை பயன்படுத்தி இவ்வகை காய்கறிகளை பயிரிட ஊட்டி சுற்று வட்டார  பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஊட்டியில் உள்ள  தனியார் நாற்றுகள் விற்பனை செய்யும் நாற்றாங்கால்களில் இருந்து புரூக்கோலி,  சைனீஸ் கேபேஜ், செல்லரி, லீக்ஸ் போன்றவற்றின் நாற்றுகளை ஆயிரக்கணக்கில்  வாங்கி சென்று தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது நடவு  செய்யும் இவை, தேவை அதிகரிக்கும் மே மாதத்தில் விளைச்சலை தரும் என  விவசாயிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக, தனியார் நாற்றாங்கால்களில்  தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வசதியாக இவ்வகை நாற்றுகள் உற்பத்தி செய்து  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Ooty: Farmers around Ooty are interested in cultivating short duration Chinese vegetables. Nilgiris.
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...