×

2016-2020ம் ஆண்டுகளில் மட்டும் எஸ்.பி.வேலுமணி ரூ.58 கோடி மோசடி: உச்ச நீதிமன்றத்தில் விவரங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு

புதுடெல்லி: ‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது மட்டுமில்லாமல், கடந்த 2016-2020ல் மட்டும் ₹58 கோடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்’ என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறைகேட்டு விவரங்களை தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேப்போன்று அறப்போர் இயக்கமும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டென்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் முடித்து வைத்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியோர் பதிலளிக்க கடந்த மாதம் 7ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி முறைகேடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாடு, உள்ளிட்ட பணிகளுக்காக ஆறு தொகுப்புகளுக்கு ₹114 கோடிக்கு ஒப்பந்த பணிகள் விடப்பட்டது. இதில் சுமார் ₹29 கோடி வரை அரசுக்கு எஸ்.பி.வேலுமணி இழப்பு ஏற்படுத்தி உள்ளார். குறிப்பாக கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தல் ஆகிய தொடர்புடைய பணிகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தங்களில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக தனது நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்ததன் காரணமாக ₹25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் எஸ்.பி.வேலுமணி சுமார் ₹58 கோடி அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் கைப்பற்றி அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதைத்தவிர கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையின் அம்சங்கள் அடிப்படையில், எஸ்.பி வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவர் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ளார். அதனால் அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சீலிடப்பட்ட கவரை வழங்க உத்தரவு: எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அதில் உள்ள விவரங்கள் என்ன என்பது எங்களுக்கு தெரிவிக்கவில்லை’’ என்றார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், ‘‘அனைத்து விவரங்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் முறைகேடு தொடர்பான சீலிடப்பட்ட கவரை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Tags : SB Velumani ,Tamil Nadu government ,Supreme Court , SB Velumani ₹ 58 crore fraud in 2016-2020 alone: Tamil Nadu government files details in Supreme Court
× RELATED ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு