×

தி.மலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசினால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையொட்டி உள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுகளை வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மான்கள், மயில்கள், முயல்கள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான மான்கள் சாலையோரம் வந்து செல்கின்றன. அந்த மான்கள் வாகனங்களில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை தடுக்கும் வகையில் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள் பலர் கம்பி வேலி அருகே நின்று மான்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் மான்களுக்கு பழங்கள், உணவு பொருட்களை வழங்குகின்றனர்.

அதன்படி நேற்று பிற்பகல் கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் அருகே வனப்பகுதியிலிருந்து சாலையோரம் வந்த 5 மான்களுக்கு, பொதுமக்கள் பிஸ்கட், ரஸ்க், பிரட் போன்றவற்றை வாங்கி வந்து வனப்பகுதிக்குள் வீசினர். அப்போது அங்கு ரோந்து வந்த வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர், பொதுமக்களிடம் மான்களுக்கு உணவுகளை வழங்க வேண்டாம். மான்களை கண்டு ரசித்து விட்டு செல்லுங்கள். இவ்வாறு உணவு வழங்குவதால்தான் மான்கள் வனப்பகுதியிருந்து அடிக்கடி வெளியே வருகிறது. அவ்வாறு வரும்போது நாய்கள் விரட்டி சென்று கடித்து விடுகிறது. மேலும், வனப்பகுதியில் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கவர்களை வீசுவதால், அவற்றை உண்ணும் மான்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுகள் வீசினாலோ, மான்களுக்கு உணவு வழங்கினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சாலையோரம் வந்திருந்த மான்களை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags : Thimalai Kiriwalapathai ,Forest Department , Strict action by throwing plastic in the forest: Foresters warning
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...