×

சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில்: 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜை

காங்கயம்: கோவை பக்தரின் கனவில் வந்த உத்தரவுப்படி சிவன்மலை கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை பழங்கள் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் தலமாகவும் விளங்குகிறது. வேறு எந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.
முருக பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டி காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்த பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜை செய்யப்பட்டபோது, அதன் பயன்பாடு வெகுவாக குறைந்துபோனது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்டபோது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
இவ்வாறு எந்த பொருள் வைக்கப்படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்த மாதம் 1ம் தேதி முதல் கடலூரை சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான போகர் சித்தரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. 1ம் தேதி வைக்கப்பட்டு 2 நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Tags : Lord ,Sivanmalai Temple , Sivanmalai temple lord order, 3 kg vibudhi, 7 lemons with pooja
× RELATED இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!