திருப்புத்தூர் அருகே மஞ்சு விரட்டில் 231 காளைகள் பங்கேற்பு-15 பேர் காயம்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே குமாரப்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூமலச்சி அம்மன் கோயில் பங்குனிதிருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.திருப்புத்தூர் அருகேயுள்ள குமாரப்பேட்டை கிராமத்தில் ஸ்ரீபூமலச்சி அம்மன் கோவிலில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் தொழுவிற்கு கொண்டுவரப்பட்ட 231 காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 பின்னர் தொழுவில் இருந்து ஒவ்வொறு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 40 வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். முன்னதாக பல ஊர்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து காலை 11.00 மணியளவில் ஊர்ககுளத்தான்பட்டி அருகே கண்மாய் பகுதி, வயல்காட்டுப் பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதில் பெரியகோட்டையைச்சேர்ந்த நிரோஜ் கண்ணன்(22), ஆதனூரைச்சேர்ந்த மஞ்சுநாதன் (19), ஒடுவன்பட்டியைச்சேர்ந்த யோகேஷ்(23) ஆகியோர் மேல் சிகிச்சைகாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Related Stories: