×

போதை பார்ட்டியில் இளம்பெண்களும் கும்மாளம் பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பிள்ளைகள் சிக்கினர்: நடிகர் சிரஞ்சீவி தம்பி மகளும் கைது

திருமலை: ஐதராபாத் ஓட்டல் பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்தியதாக 39 பெண்கள் உட்பட 157 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், நடிகர் சிரஞ்சீவி தம்பி மகளும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடக்கும் பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, பார்ட்டியில் கலந்து கொண்ட நபர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அங்கிருந்த அனைவரையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து 99 வாலிபர்கள், 39 இளம்பெண்கள் மற்றும் 19 பப் ஊழியர்கள் என 157 பேரை கைது செய்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களில் சினிமா, அரசியல் பிரபலங்களின் பிள்ளைகளும், பெரும் தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளனர். பிக்பாஸ் வின்னர் ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பி மகள் (நடிகர் நாகபாபுவின் மகள்) நிஹாரிகாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாகபாபுவின் மகள் நிஹாரிகா, பிக்பாஸ் புகழ் நெபுலா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோரை, பல்வேறு விசாரணை மற்றும் சோதனைக்கு பிறகு, சுமார் 10 மணி நேரம் கழித்து, நோட்டீஸ் வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முழு விவரங்களை சேகரித்த நிலையில், பார்ட்டியில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருள்கள், எல்எஸ்டி அடங்கிய சிகரெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 157 பேரில் 45 பேர் போதை பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும், போதை பொருள் வழக்கில் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். போலீசார் சோதனைக்கு சென்றபோது, அங்கு பார்ட்டியில் இருந்தவர்கள், கையில் இருந்த போதை மருந்துகளை ஜன்னல் வழியாக வீசிய நிலையில், அவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பப் உரிமம் முன்னாள் எம்பி ஒருவரது மகள் பெயரில் உள்ளது.  கடந்த ஜனவரியில் வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

Tags : Chiranjeevi , Famous political leaders, actors and children involved in drug dealing
× RELATED ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள...