×

ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!: ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல் ..!!

சென்னை: நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய மையமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற திருப்பூர் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக திருப்பூரில் தான் தயாரிக்கின்றன. ஆனால் அந்த தொழிலை முடக்கும் வகையில், பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்தாண்டு ரூ.230-க்கு விற்பனையான நூல் விலை இந்த ஆண்டு ரூ.160 வரை உயர்ந்துள்ளது. தற்போது அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

இதனால் ரகங்களின் அடிப்படையில் நூல்களின் விலை தற்போது ரூ.365 முதல் ரூ.435 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நூல் விலை உயர்வால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு, பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் முடங்கிவிடும். ஜவுளித்துறை முடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். நூல்களின் விலை உயர்வை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அனைத்து  விலைவாசிகளின் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Vijayakanth ,Union government , Thread Price, Government of India, Vijayakand
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...