அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தனியார் கோயில்களை இணைக்க கட்டுப்பாடு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தனியார் கோயில்களை இணைக்க கட்டுப்பாடுகளை விதித்து ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனைத்து இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின் பிரிவின் கீழ் அல்லது அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளில் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் செலுத்தவும், கடமைகளை ஆற்றிடவும் உதவி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் திருக்கோயில்களின், அறநிலையங்களின் நடைமுறை நிர்வாகிக்கு ஏன் சட்டத்தின்படியான அறங்காவலர்களை நியமனம் செய்யக்கூடாது என காரணம் கேட்கும் அறிவிப்பில் முதலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குறைபாடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறிய திருக்கோயில்கள் பட்டியலில் சேர்க்க இவ்வலுவலகத்திற்கு பரிந்துரை செய்திட வேண்டும். மேலும் உதவித் தொகை நிர்ணயம் செய்திடவும் பரிந்துரை செய்திட வேண்டும். காரணம் கேட்கும் அறிவிப்புக்குரிய காலக்கெடு முடிவடைந்த பின்னரே அறங்காவலர் அல்லது தக்கார் நியமனம் செய்து உதவி ஆணையரால் ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காரணம் காட்டும் அறிவிப்பு கொடுக்காமல் அறங்காவலர் அல்லது தக்கார் நியமனம் செய்யக்கூடாது. இந்த நடைமுறை விதிகளை மீறி செயல்படும் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: