×

மோடியையும், பாஜகவையும் எதிர்கொள்ள ஐ.மு. கூட்டணி தலைவராக சரத்பவாரை தேர்வு செய்ய வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் தீர்மானம்; சிவசேனா ஆதரவு

புதுடெல்லி: மோடியையும், பாஜகவையும் எதிர்கொள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக சரத்பவாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தேசியவாத இளைஞர் காங்கிரசின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அக்கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைக்கவும், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து தனி கூட்டணி அமைக்கவும் எதிர்கட்சிகள் தரப்பில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், அதன் மூத்த தலைவர்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டுக்கு பின்னர் அக்கட்சிக்கு முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாநில அளவில் கட்சியின் பலம் குறைந்து வருகிறது. பல மாநில தேர்தல் தோல்விக்கு, கட்சியின் தலைமை குறித்த கேள்விகள் கட்சியின் மூத்த தலைவர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று தேசியவாத இளைஞர் காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமை வகித்தார்.

அப்போது கூட்டத்தில், ‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சரத்பவார் தலைமையில் காங்கிரஸ் மற்றும் பிற மாநில கட்சிகளை (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) வழிநடத்த வேண்டும். நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவரான சரத்பவார், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர், வேளாண் அமைச்சர் போன்ற பதவிகளில் பணியாற்றினார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சித் தலைமையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் தொடர்பாக சரத் பவார் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்கட்சிகள் மட்டுமின்றி பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்காத சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போட்டுள்ள தீர்மானத்தை ஆதரித்து கருத்து கூறிவருகிறது. முன்னதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘மோடியையும், பாஜகவையும் எதிர்கொள்ள, தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி துணிச்சலாக செயல்பட வேண்டும். அதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்த மற்றும் தலைமையை சரத்பவாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்ப அளிக்க வேண்டும்’ என்றார்.

அதனால் வரும் நாட்களில் சரத் பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தேர்வு அறிவிக்கப்படுவாரா? சிவசேனா கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Tags : Modi ,Pajga Md. ,Saratbawar ,Nationalist Congress ,Sivasena , UP para enfrentar a Modi y BJP Sarabjit debería ser elegido como líder de la coalición: resolución del Congreso Nacionalista; Soporte técnico de Shiv Sena
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...