ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை சிறப்பு தனிப்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நேற்று முன்தினம் முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் கஞ்சா, குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்பவரை கண்காணித்து கைது நடவடிக்கைகள் ரயில்வே காவல் துறையினர் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சிறப்பு தனிப்படை பிரிவினர் நேற்று ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தன்பாத்திலிருந்து  ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ்  ரயில் நிலையம்  2வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.  இதையடுத்து ரயில்வே போலீசார் டி4 கோச்சில் சோதனை செய்தபோது, பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாறற்று கிடந்த 3 பேக்கில் 16 பாக்கெட் கொண்ட சுமார் 10 கிலோ எடைக் கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: