நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் முற்றுகை: சூனாம்பேடு அருகே பரபரப்பு

செய்யூர்: உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கரையோர பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் கன்கிரீட் வீடுகள் கட்டி கிராம மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகளுக்கு தெரிந்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்த மக்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், இடத்தை காலி செய்ய கால அவகாசம் வழங்கினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கால அவகாசம் நிறைவடைந்ததால், நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செய்யூர் வட்டாட்சியர் சகுந்தலா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இதையறிந்த கிராம மக்கள், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சிறைபிடித்து, முற்றுகையிட்டு தங்களுக்கு மாற்று இடம் தரும் வரை வீடுகளை அகற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அவர்களிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் நாளை ஒருநாள் (இன்று) அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என கூறி சென்றனர்.

Related Stories: