×

மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி-மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி :  மயிலாடும்பாறை பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியினை மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதிக்குட்பட்ட ஐகுந்தம், தொகரப்பள்ளி, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகள் தற்போது தமிழகத்தின் முக்கிய தொல்லியல் இடமாக ஆய்வாளர்களைக் கவர்ந்துள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையை சேர்ந்த நரசிம்மைய்யா தொகரப்பள்ளியிலும், தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராஜன் மயிலாடும்பாறையிலும் ஏற்கனவே அகழாய்வு மேற்கொண்டு பல அறிய தகவல்களை கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக கள ஆய்வுகள் மேற்கொண்டு பல பாறை ஓவியங்கள், பெருங்கற்படைக்கால வாழ்விடங்கள் மற்றும் அரிய வணிகக்குழுக் கல்வெட்டுக்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழகத் தொல்லியல் துறை மயிலாடும்பாறையில், முதல்கட்ட அகழாய்வைத் துவங்கியது. அதில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு வாள், சிவப்புநிற மூன்று கால் ஜாடி போன்ற முக்கிய பொருட்கள் கிடைத்துள்ளன. 10 ஆயிரம்  ஆண்டுகள் பழமையான நுண்கற்காலம் தொடங்கி, புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம், வரலாற்றுக் காலமான விஜயநகரர் காலம் வரை தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், இரும்பு உருக்கு ஆலை இங்கு இருந்ததற்கான அடையாளமாக, உருக்கு ஆலையின் பாகங்களும் கிடைத்துள்ளன. சங்க காலம் தொட்டு விஜயநகரர் காலம் வரை இப்பகுதி வணிகத்தில் சிறந்து விளங்கியதை பாறை ஓவியக் குறியீடுகளும், கல்வெட்டுக்களும் தெளிவாக்குகின்றன. முதல்கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களை, பெங்களூர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டெடி, மதுரை மரபியல் துறை, அமெரிக்கா புளோரிடா மாகாணம் பீட்டா அமைப்பு, விஐடி., டெக்கான் யூனிவர்சிடி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவுகள் வரவில்லை.

இந்நிலையில், மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று பர்கூர் எம்எல்ஏ., மதியழகன், நேற்று அகழாய்வுப் பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிற்பக் கலைகள், தொல்பொருள் ஆய்வுக்கான பகுதிகள் அதிகம் உள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொன்மை நமக்குத் தெரியவரும், என்றார்.

இது குறித்து மயிலாடும்பாறை தொல்லியல் அகழாய்வு இணை இயக்குனர் சக்திவேல் கூறியது: கடந்த ஆண்டு மயிலாடும்பாறை சானரப்பன் மலை அடிவாரத்தில் நடந்த முதல்கட்ட அகழாய்வில் மனிதர்களின் ஈமச்சின்னங்கள் குறித்து ஆய்வு நடந்தது. இரண்டாம் கட்டமாக, ஐகுந்தம் அருகில் மனிதர்கள் வாழ்விடப் பகுதியில் அகழாய்வு துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆய்வில், மூன்று கால்கள் பானை ஓடு, கத்திகள், ஈமச்சின்னத்தில் பயன்படுத்திய தொல் பொருட்கள் அதிக அளவில் கிடைத்தன.

அதில் கிடைத்த பொருட்களை பல்வேறு ஆய்வுப் பணிக்காக அனுப்பியுள்ளோம். விரைவில் ஆய்வு முடிவு தெரியவரும். இந்நிலையில், இரண்டாம் கட்ட அகழாய்வு வாழ்விடப் பகுதியில் துவங்க உள்ளதால், ஈமச்சின்ன பகுதிகளுக்கும், வாழ்விடப் பகுதியில் வாழ்ந்தவர்களுக்கும் தொடர்புடையதா என அகழாய்வு நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Mayiladuthurai ,Mathiyalakan MLA , Krishnagiri: Mathiyalakan MLA has started the second phase of excavation work in Mayiladuthurai area. Krishnagiri District, Bargur
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...