×

தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் எதிரொலி விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு: கல்லா கட்டும் விமான நிறுவனங்கள்

சென்னை:  தொழிற்சங்கத்தினரின் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் 2 நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் போக்குவரத்து பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்துத்துறை  தொழிலாளர்கள் பெருமளவில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அரசு போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. இதனால் வெளியூர் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மிகவும் குறைந்த அளவு வாகனங்களே இயக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபடுவதால், வெளியூர் செல்லும் பயணிகள் சாலை வழியாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்றே கருதுகின்றனர்.  எனவே வெளியூர் செல்லும் பயணிகள் குறிப்பாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், விமான பயணத்தையே நாடியுள்ளனர். இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் விமான பயண கட்டணம் திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டது.  

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்  விமான கட்டணம் வழக்கமாக ரூ.4,500. ஆனால் நேற்றைய தினம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு உயர்ந்தபட்ச கட்டணமாக ரூ 9,662. அதைப்போல் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு வழக்கமான கட்டணம்  ரூ.4500. ஆனால் நேற்றைய தினம் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.8,262. மேலும் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.3,700. ஆனால் நேற்றைய விமானக் கட்டணம் ரூ.5042. அதேபோல் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.3,900. ஆனால் நேற்று ரூ.4,617.  இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, போக்குவரத்துதுறை வேலை நிறுத்தத்திற்கும்,விமான கட்டணத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை. விமான கட்டணம் பல அடுக்குகள் முறையில் உள்ளது. அதில் குறைந்த கட்டண விமான டிக்கெட்கள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.

இறுதி நேரத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு அதிகப்பட்ச கட்டண டிக்கெட்டுகளே உள்ளது. இதனால் அவைகளை கொடுக்கிறோம். இது வழக்கமானது தான். ஆனால் இன்று (நேற்று)பொது வேலை நிறுத்தம், பஸ் போக்குவரத்து பாதிப்பும் சேர்ந்துவிட்டது. அதனால் தான் கட்டணம் உயர்ந்துவிட்டதாக பயணிகள் கருதுவதாக கூறுகின்றனர். ஆனால் பயணிகள் தரப்பில், இதை மறுக்கின்றனர். பொதுவாக பண்டிகை காலங்களில் அல்லது வீக்எண்ட் வெள்ளி, சனி ஞயிறுகளில் கட்டணம் சற்று உயர்வது வழக்கமான  ஒன்றுதான். ஆனால் வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று இந்த திடீரென கட்டண உயா்வு போக்குவரத்து துறை வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட உயா்வு என்றுதான்,நாங்கள் கருதுகிறோம் என்று கூறுகின்றனா்.  





Tags : Union ,Kalla , Echoing the union strike Air fares rise sharply: Kalla Airlines
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை