×

ஓபிஎஸ் கூறியது அவரது சொந்த கருத்து அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஓமலூர்: அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 37 ஒன்றியங்கள் மற்றும் 33 பேரூராட்சி, 6 நகராட்சிகளுக்காக ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம்.  காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், இரு மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, கர்நாடக அரசு திட்டமிட்டு நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் குடிநீர் கூட கிடைக்காது.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்னையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. மேகதாது அணையை தடுக்க, அதிமுக ஆட்சியில் இருந்த போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தற்போது அதிமுகவில் 25 மாவட்டங்களுக்கான அமைப்புத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துதான். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் விசாரணை நடைபெறும்போது,  கருத்து சொல்வது குந்தகம் விளைவிக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்பிருக்கிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமைக்கழகமும் இணைந்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. நானும், ஓபிஎஸ்சும் இணைந்து கையெழுத்திட்டு அதனை அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது என்றார். சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, அரசியல் வேறு. தனிப்பட்ட முறையில் பிரச்னை கிடையாது. அதனடிப்படையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OBS ,Sasigala ,Edapadi ,Palanisamy , OBS says his own opinion: AIADMK has no chance of reinstating Sasikala: Edappadi Palanisamy
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி