×

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு சுமோட்டோ அறிவிப்பு

சென்னை:ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி ‘உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும்’ என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தது. அதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி எப்படி 10 நிமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்ய முடியும். ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுமோட்டோ நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி ஷரட்கர் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமோட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது உணவு வழங்கும் ஊழியர்கள் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் போக்குவரத்து விதி மீறல்கள் இல்லாமல் உணவு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு சுமோட்டோ நிறுவன அதிகாரிகள் ‘10 நிமிட டெலிவரி திட்டம்’ இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே தொடங்க திட்டமிட்டப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் என்றும், சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற 10 நிமிட டெலிவரி திட்டம் தற்போது சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமில்லை. அதேபோல், ‘குறிப்பிட்ட விநியோக நேரம்’ சம்மந்தப்பட்ட எந்தொரு திட்டமும் முன்னறிவிப்பு மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்புடன் மட்டுமே தொடங்கப்படும் என்று கூறினார்.

Tags : Sumoto ,Additional Commissioner of Transportation , No food delivery plan within 10 minutes of order: Sumoto announcement after meeting chaired by Additional Commissioner of Transport
× RELATED ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு...