×

இந்து சமய அறநிலையத்துறையின் ஒன்பது மாத செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் ஒன்பது மாத செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சி 98 வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினியின் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் அபரிமிதமான வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணம் தமிழக முதல்வர் வெளிப்படைத் தன்மை யான ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் காரணமாக மக்கள் போற்றும் முதல்வராக திகழ்கிறார். அதனால்தான் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களது வாக்குகள் மூலம் 9 மாத கால ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தற்பொழுது வெற்றிபெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி தர பணியாற்ற வேண்டும். சிறப்பான பணி காரணமாக,  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது பெற்றதை விட அதிகப்படியான வாக்குகளை திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற வேண்டும். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளது. இதனை எதிர் கட்சியினர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே,  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது என்பது பெருமைப்படத்தக்க ஒன்றாகும். சென்னை மாநகரில் ஆட்சியதிகாரம் திமுக வசம் உள்ளது. எம்பிக்களும், எம்எல்ஏக்களும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்.

அதேபோல் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் எழில்மிகு சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்ற நிச்சயம் முடியும். கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம், பக்தர்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை தொடர்ந்து நிறைவேற்றி தந்து வருகிறோம். பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் கிடந்த நிலங்கள் மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வருடக்கணக்கில் வசூல் செய்யப்படாமல் இருந்த வாடகை நிலுவை தொகைகள் தற்பொழுது வசூல் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதனையும் தாண்டி 200 கோடி செலவில் திருக்கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு திருப்பணிகள், நந்தவனங்கள் பராமரிப்பு, புதிய குளங்கள் ஏற்படுத்துதல், பழைய குளங்களை தூர்வாருதல், திருத்தேர்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனைக் கண்டு ஆன்மிகவாதிகளும், பக்தபெருமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வேண்டுமென்றே அவதூறு விமர்சனங்களை தொடர்ந்து செய்துவருகின்றனர். எந்தவிதத்தில் விமர்சனங்கள் செய்தாலும் எங்களது பணியை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தொடர்ந்து செய்வோம். இந்து சமய அறநிலையத்துறை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கிய நிதி எவ்வளவு, எந்தெந்த திட்டங்களுக்கு அவை செலவிடப்பட்டது, எந்தெந்த திட்டங்களுக்காக செலவிடப்பட உள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது,  எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது,  என்னென்ன பணிகள் துவங்கப்பட உள்ளது , என்பது குறித்து  வருகின்ற செவ்வாய் அல்லது புதன்கிழமை  வெளிப்படை தன்மையுடன் அறிக்கையாக வெளியிட உள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தவறுகள் எங்கு நடந்தாலும் அதனை இந்துசமய அறநிலையத்துறை நிச்சயம் வேடிக்கை பார்க்காது, தவறு செய்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் செய்தால் அந்த புகாரின் உண்மைத் தன்மையை அறிந்து நிச்சயம் அதிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். பேட்டியின்போது, எம்எல்ஏக்கள் அ.வெற்றியழகன், தாயகம் கவி மற்றும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Hindu Religious Institute ,Minister ,P. KK Sakerbabu , Detailed report on the nine months of activities of the Department of Hindu Religious Affairs will be released: Interview with Minister BK Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...