×

10 அணிகள்... 70 லீக் போட்டிகள் 15வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: மும்பையில் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி 15வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை முதல் மே 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லீக் போட்டிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அணிகள் லீக் சுற்றில் மோதும் முறையும் மாற்றப்பட்டுள்ளது.

அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதற்கு அடுத்து அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை போட்டித்தர நிலையில் முதலிடம் வழங்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே 2வது இடத்தை பெற்று ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு போலவே ஒரு அணிக்கு 14 லீக் ஆட்டம் உண்டு. அதாவது ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர் பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இதன்படி நடப்பு சாம்பியனான சென்னை எதிர் பிரிவில் உள்ள மும்பை இந்தியன்சை 2 முறை எதிர்கொள்ள இருக்கிறது. இதேபோல் எதிர் எதிர் பிரிவில் கொல்கத்தா-ஐதராபாத், ராஜஸ்தான்-ஆர்சிபி, டெல்லி-பஞ்சாப், லக்னோ-குஜராத் அணிகள் 2 முறை மோதும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, புனேவில் மட்டும் லீக் போட்டிகள் நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 20, மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் 15, மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் 20 போட்டியும், புனேயில் உள்ள எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியத்தில் 15 போட்டியும் நடைபெறும்.

மொத்தம் 58 நாட்களில் 70 லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 12 நாட்கள் 2 போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 2 போட்டி நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கும். நாளை இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

9 முறை பைனலுக்குள் நுழைந்த சிஎஸ்கே
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 12 சீசன்களில் விளையாடி உள்ளது. 2016, 17ம் ஆண்டுகளில் தடை காரணமாக பங்கேற்கவில்லை. இதில் 9 முறை பைனலுக்குள் நுழைந்ததில் 4 முறை (2010, 11, 18, 21) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5முறை 2ம் இடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக மும்பை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா 2 முறை மகுடம் சூடி உள்ளது.

ஆரஞ்சு, பர்பிள் தொப்பி

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் 635 ரன் எடுத்து ஆரஞ்ச் தொப்பியை வைத்திருந்தார்.
இதேபோல் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர் பர்பிள் நிற தொப்பியை வைத்துக்கொள்ளலாம். அதன்படி கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்சல்பட்டேல் 32 விக்கெட் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வைத்திருந்தார்.

Tags : IPL ,Weeding cricket festival ,Mumbai , 10 teams, 70 league matches, IPL
× RELATED மும்பை சவாலுக்கு சன்ரைசர்ஸ் தயார்