×

நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை :நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.

சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில் சென்று இணை ஆணையர் ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!,என்றார்.



Tags : Chennai ,Ramya Bharadi ,Md. ,KKA ,Stalin , Cycle, Associate Commissioner, Ramya Bharathi, Chief Minister, MK Stalin, Greetings
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...